Logo Design by FlamingText.com
Logo Design by FlamingText.com

Friday, June 13, 2014

நான் பச்சை மனிதன் ! (android)

நான் பச்சை மனிதன் !

டேப்லெட், டச் ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரைக் கைப்பேசிகள் இப்போது எங்கும் உள்ளன. அவற்றில், 'டாக்கிங் டாம்’ எனப்படும் பேசும் பூனையுடனோ, 'கட் தி ரோப்’ என்ற கயிறை வெட்டி விளையாடும் ஆட்டத்தையோ விளையாடி இருப்பீர்கள். புகைப்படம், வீடியோ எடுத்து இருப்பீர்கள். ஆண்ட்ராய்டு என்ற பெயரையும் பச்சை நிறத்தில் க்யூட் உருவத்தையும் பார்த்திருப்பீர்கள். யார் இந்த பச்சை மனிதன்?
'டிராய்டு’ என்ற சொல், மனித உருவத்தில் உள்ள இயந்திரங்களைக் குறிப்பது. ஸ்டார் வார்ஸ்  திரைப்படத்தில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. மனிதனைப் போலவே தோற்றம் அளிக்கும்  கொழுகொழு பச்சை நிற இயந்திர மனிதன்தான் ஆண்ட்ராய்டின் குறியீட்டுச் சின்னம்.
உங்கள் வீட்டில் கணினிகளை இயக்கும்போது, அவற்றை விண்டோஸ் எனப்படும் மென்பொருள் மூலம் இயக்குவீர்கள். இதற்கு ஆபரேட்டிங் சிஸ்டம் என்று பெயர். நீங்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு, அதைக் கணினி புரிந்துகொள்ளும்படி, இயந்திர மொழியில் சொல்வதே இதன் வேலை. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், ஆப்பிள் மேக் ஓஎஸ் போன்றவை இதற்கு உதாரணங்கள். இவற்றை உபயோகிக்க, அந்த நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். பணம் கொடுக்காமல், இலவசமாக நம்மை அனுமதிக்கும் ஆபரேட்டிங் சிஸ்டமும் உண்டு. அதன் பெயர் லினக்ஸ். இதுபோன்ற மென்பொருள்களை ஓப்பன் சோர்ஸ் என்பார்கள்.
இவற்றுக்கும் ஆண்ட்ராய்டுக்கும் என்ன சம்பந்தம்? கைப்பேசிகள் எனப்படும் மொபைல் போன்கள் முதலில் வந்தபோது, அவற்றில் பேசுவது, கேட்பது, எண்களைச் சேமிப்பது போன்ற சில வசதிகளே இருந்தன. தொழில்நுட்பம் வளர்ந்தது. புகைப்படம், வீடியோ எடுப்பது, இணையத்தை துழாவுவது, மின்னஞ்சல் அனுப்புவது என்று கைப்பேசிகள் மாறத்தொடங்கின. எனவே, கணினிகளை இயக்கும் அளவு, சக்தி வாய்ந்த ஆபரேட்டிங் சிஸ்டம் தேவைப்பட்டது.
கைப்பேசிகளின் திரைகள், அளவில் சிறியவை. பேட்டரியில் இயங்கக்கூடியவை. மௌஸ், கீபோர்டு போன்றவை இல்லை. எனவே, கைப்பேசிகளில் உபயோகிக்க, தனியான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் முயன்றன.
இவற்றில் முந்திக்கொண்டது ஆப்பிள்தான். 2007-ம் ஆண்டு ஐபோனை விற்பனைக்கு வெளியிட்டது. அதில் ஐஓஎஸ் எனப்படும் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இது, அதனுடைய மேக் ஓஎஸ் என்ற கணினி ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மேம்படுத்திய வடிவம். இந்த ஐபோன், முழுக்க முழுக்க விரல்களால் இயக்கப்படும் தொடுதிரைக் கைப்பேசி. இதற்கு முன் சில முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை, 'ஸ்டைலஸ்’ எனப்படும் பென்சில் போன்ற குச்சியால் இயக்கும் வகையில் இருந்தன.
2005-ல் இருந்தே கூகுள் நிறுவனம், தனியாக ஒரு கைப்பேசி ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க முயன்றது. அது, எண் பலகை சார்ந்த ஒன்று. ஐபோன் பெரிய வெற்றிபெற்று, உலகமே தொடுதிரை நோக்கி நகர்வதை, கூகுள் உணர்ந்தது. தனது திட்டத்தை மாற்றி, தொடுதிரைக் கைப்பேசிகளில் உபயோகிக்கும்படி  மாற்றியது. இதற்குக் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் செலவானது. இதற்காக, 2007-ல் ஆப்பிள் அல்லாத ஹெச்டிசி, சாம்சங், சோனி போன்ற கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தன. ஓப்பன் ஹேண்ட்செட் அல்லயன்ஸ் என்ற அமைப்பை உருவாக்கின. 2008-ல், ஹெச்டிசி ட்ரீம் எனப்படும் முதல் ஆண்ட்ராய்டு கைப்பேசி விற்பனைக்கு வந்தது.
கப்கேக் என்று பெயரிடப்பட்ட ஆண்ட்ராய்டின் முதல் பதிப்பு, அத்தனை வேகமாக இல்லை. ஆனால், அடுத்தடுத்து முன்னேறிய பதிப்புகள் வந்தன. அதன் பிறகு வந்த ஆண்ட்ராய்டு பதிப்புகளும் டோனட், ஐஸ்க்ரீம், சாண்ட்விச் என்று குழந்தைகள் உண்ணும் தின்பண்டங்களின் பெயராலே அழைக்கப்பட்டன. தற்போதைய நான்காவது பதிப்பு, (4.4) கிட்கேட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது, அதிவேகமானதாகவும் பல வசதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. சிறிய திரை கைப்பேசிகளிலும் பெரிய திரை டேப்லெட்களிலும் ஒரே மாதிரி இயங்கும்.
எப்படி மேக் ஓஎஸ் என்ற கணினி, ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இருந்து ஐஓஎஸ் பிறந்ததோ, அதேபோல லினக்ஸ் என்ற ஓப்பன் சோர்ஸ் கணினி ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக்கொண்டு உருவானதே, ஆண்ட்ராய்டு. இதை நம் கருவிகளில் உபயோகிக்க, பணம் கொடுக்க வேண்டாம். ஒரு கைப்பேசியைப் புதிதாக உருவாக்குகிறீர்கள் என்றால், அதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லாமல் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தலாம்.
இது, தொடுதிரைக் கருவிகளுக்கான ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம். ஆனால், இதை கைப்பேசி அல்லாத கருவிகளிலும் உபயோகிக்க முடியும். டிவி, கேமரா, கார் ஆடியோ சிஸ்டம் போன்ற கருவிகளையும் ஆண்ட்ராய்டு மூலம் இயக்கலாம். சாம்சங் நிறுவனம் தன்னுடைய டிஜிடல் கேமராவில் இதைப் பயன்படுத்தியது. புகைப்படம் எடுத்தவுடன் கணினி உதவியின்றி உங்கள் கூகுள் மேகக் கணக்கில் படங்களைச் சேமிக்கும் வசதி இருக்கிறது.  எதிர்காலத்தில், ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் கார்கள் வரக்கூடும்.
உங்கள் கைப்பேசியை அல்லது டேப்லெட்டை விளையாடும் கருவியாகவோ, ஒரு புகைப்படக் கருவியாகவோ, திரைப்படங்கள் பார்க்கவோ பயன்படுத்தி இருப்பீர்கள். அது மட்டுமின்றி, உங்கள் கல்வி சம்பந்தமான தகவல்களைத் திரட்டவும் சேமிக்கவும் அது தொடர்பான விளையாட்டுகள் விளையாடவும் நண்பர்களுடன் உரையாடவும்   பயன்படுத்த முடியும். இதன் பின்னணியில் உங்களுக்காக உழைக்கும் ஓர் இயந்திர மனிதனாக ஆண்ட்ராய்டு என்கிற இந்தப் பச்சை மனிதன் இருக்கிறான்.
(vikatan)