
டாஸ்கர் : அன்றாட பணிகளை பட்டியலிட்டு செய்ய உதவுகிறது இந்த அப்ளிகேசன். இதன் மூலம் எல்லா பணிகளையும் வரிசைப்படியும், மறக்காமலும் செய்யலாம்.
மேலும் அந்த பணிகளுக்கு இடையூறாக இருக்கும் சில தடங்கல்களையும் தடுக்கிறது டாஸ்கர். அதாவது நீங்கள் நூலகத்தில் இருக்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தால் அந்த நேரத்தில் உங்கள் ஸ்மார்ட்போன், 'சைலன்ட் மோடு'க்கு தானாகவே மாற்றப்பட்டுவிடும். விவாதத்தில் அல்லது சினிமா போன்ற நிகழ்வுகளில் இருக்கும்போது அழைப்புகள் வந்தால், எந்தெந்த எண்களுக்கு என்னென்ன பதில்களை எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என்றும் இதில் பதிவு செய்து வைக்கலாம். இன்னும் செல்போனில் எந்தெந்த வசதிகள் செயல்பாட்டில் (ஆன்) இருக்கின்றன என்பதையும் இது பட்டியலிடும். இதனால் தேவையற்ற அப்ளிகேசன்களை இயக்காமல் நிறுத்தி வைத்து பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம். முதல் சில நாட்களுக்கு இலவசமாகவும், பின்னர் 5 டாலர் விலையிலும் இந்த அப்ளிகேசனை பயன்படுத்த முடியும்.
கோர்ஸ்எரா (Coursera): உங்களையும், உலக அளவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள், வாசிப்பாளர்களையும் இணைக்கும் சமூக வலைத்தளம்போல செயல்படுகிறது இந்த அப்ளிகேசன். உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் இணையதள வகுப்புகள், கல்வி ஆலோசனைகள் இதில் இடம் பெறுகிறது. எங்கேயிருந்தும், எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட பாடத்திட்டங்கள் பற்றிய விரிவுரையை இந்த அப்ளிகேசன் வழியே பார்த்து பயன்பெறலாம். உங்கள் கேள்விகளையும் பதிவு செய்து பதில்களை பெற முடியும்.
குயிக்ஆபீஸ் (QuickOffice): மைக் ரோசாப்ட் ஆபீஸ் போல, சில திட்டப் பணிகளுக்கு உதவுகிறது குயிக்ஆபீஸ். இதில் வேர்டு டாகுமென்ட், ஸ்பிரெட்ஷீட், பிரசன்டேசன் போன்ற கோப்புகளை உருவாக்கவும், எடிட் செய்து அனுப்பவும் முடிகிறது.
ஸ்லைடு சேர் (Slide Share): உங்கள் கற்பனைக்கு ஏற்ப, 'பிரசன்டேசன்' கோப்புகளை உருவாக்க உதவுகிறது இந்த அப்ளிகேசன். விருப்பம்போல வாழ்த்துகளையும், மீம்ஸ்களையும் உருவாக்கவும், எடிட் செய்யவும் முடியும். இதற்கு இணையதளம் தேவையில்லை.
டிரைப் ஸ்போர்ட்ஸ்(Tribe Sports):- மிகப்பெரிய விளையாட்டு குழுமத்தில் ஒன்று டிரைப் ஸ்போர்ட்ஸ். ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்காக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அப்ளிகேசன் இது. உங்களது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஜி.பி.எஸ். நுட்பத்துடன் கண்காணித்து மதிப்பிடுவது இதன் சிறப்பு. நீங்கள் எவ்வளவு நேரம் உடற் பயிற்சி செய்தீர்கள், கிரிக்கெட்டில் எத்தனை ரன்கள் எடுத் தீர்கள், வேறு விளையாட்டுகளில் உங்கள் திறன் எவ்வளவு என்பதை பதிவு செய்து வந்தால், சில ஒப்பீட்டு தகவல்களை காட்டும். கடந்த வாரம் எவ்வளவு நேரம் பயிற்சி செய்தீர்கள், இந்த வாரம் எவ்வளவு பயிற்சி செய்தீர்கள், முன்னேற்றம் எவ்வ ளவு? என்பதுபோன்ற விவரங்களை பட்டியலிடும். அதற்கேற்ப நமது ஆட்டத்திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்த முடியும்.
கால்கு(CALCU): வழக்கமான கணக்குப்போடும் வேலையை செய்யும் அப்ளிகேசன்தான் என்றாலும் சில புதுமைகளை இதில் உணரலாம். சாதாரண கணக்கு முதல், ஆழ்ந்த அறிவியல் கணக்கீடுகள் வரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட அளவுக்கு நாம் செய்த கணக்கீடுகளை சேமிப்பாகவும் காட்டக்கூடியது.
மின்ட் (Mint): வரவு செலவு திட்டமிடலுக்கு சிறந்த அப்ளிகேசன் இது. உங்கள் வரவு செலவை இதில் பதிவு செய்து கொண்டே வந்தால், அது ஒரு பட்டியலை தயாரிக்கும். எதற்காக அதிகம் செலவிடுகிறோம், புத்தகம் வாங்குவதற்கும், சினிமா பார்ப்பதற்கும் கடந்த முறையைவிட இந்த முறை எவ்வளவு செலவிட்டிருக்கிறோம் என்பது போன்ற ஒப்பீட்டு பட்டியலை காண்பிக்கும். இதன் மூலம் நமது அவசியமற்ற செலவை தெரிந்து கொண்டு வரவு செலவை திட்டமிட்டு, கூடுதலாக சேமிக்க முடியும். ரகசிய குறியீட்டு எண்ணின் மூலமாகவே இதை திறக்க முடியும் என்பதால், செல்போன் தொலைந்தாலோ அல்லது நண்பர்கள், உறவினர்கள் பயன்படுத்தினாலோ உங்கள் கணக்கை திறந்து பார்க்க முடியாது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, குடும்பஸ்தர்களுக்கும் ஏற்றதுதான் மின்ட் அப்ளிகேசன்.
சன்ரைஸ் (Sunrise) : இதுவும் ஒரு பணி விவர பட்டியல் அப்ளிகேசன்தான். பல்வேறு தளங்களில் கிடைக்கும் காலண்டர் அப்ளிகேசன்களின் சிறப்புகள் இதில் ஒட்டு மொத்தமாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முகப்பு பக்கத்தை அலங்கரிக்கும் வசதியும் இதில் உள்ளது.
ஐ.எப்.டி.டி.டி. (IFTTT): இப் திஸ் தென் தேட் (If This Then That) என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம்தான் இந்த அப்ளிகேசனின் பெயர். இது தட்பவெப்பநிலை சார்ந்த சில அறிவிப்புகளை முன்கூட்டியே மின்னஞ்சலாக நமக்கு தரும். மேலும் வலைத்தளங்களில் நாம் வெளியிடும் படங்களை, தானாகவே நமது செல்போன் திரையிலும் இடம் பெறச் செய் கிறது இந்த அப்ளிகேசன்.
எவர்நோட்(Evernote): ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் களில் பரவலாக பயன்படுத்தப்படும் அப்ளிகேசன் இது. குறிப்பு எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும், பணிகளை பட்டியலிட்டு அறிவிக்கவும், ஒலி மூலமாகவே பணிகளை நினைவூட்டவும் இந்த அப்ளிகேசனில் வசதி உள்ளது. மேலும் இதில் நமது கையெழுத்திலேயே குறிப்பெடுக்கவும் வழி இருக்கிறது. நமது கையெழுத்து மாதிரியை படம் பிடித்து அனுப்பினால், அதன் பிறகு நாம் பதிவு செய்யும் குறிப்புகள் அனைத்தும் நமது கையெழுத்திலேயே பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment